விராட் கோலி உடனான சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஆகாஷ் தீப்
விராட் கோலி இளம் வீரரான ஆகாஷ் தீப்பிற்கு பேட் ஒன்றை பரிசாக வழங்கினார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் தேர்வாகியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் பி அணிக்கு எதிரான முதல் ரவுண்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் அடுத்ததாக வங்காளதேச தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வாய்ப்பில் வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார். குறைந்த ஓவர்களை வீசினாலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். புதிய பந்தில் அற்புதமாக ஸ்விங் செய்யும் பவுலராக உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி உடனான சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை ஆகாஷ் தீப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த போட்டியின்போது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நடந்தது. விராட் கோலி திடீரென என்னை அழைத்து, உனக்கு பேட் தேவைப்படுகிறதா என்று கேட்டார். ஏன் அந்த கேள்வியை விராட் கோலி கேட்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை எனது பேட்டிங்கில் ஏதாவது பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். விராட் கோலியிடம் இருந்து யார்தான் பேட் வேண்டாம் என்று சொல்வார்கள். எவ்வளவு பெரிய வீரர் அவர். நான் பேட் வேண்டும் என்று சொன்ன பின், எந்த மாதிரியான பேட்டை பயன்படுத்துவாய் என்று கேட்டார்.
அப்போது நான், 'பையா.. நீங்கள் கொடுக்கும் பேட்டை நான் பயன்படுத்தப் போவதில்லை' என்றேன். விராட் கோலியிடம் கிடைத்த மிகப்பெரிய பரிசு அது. எனது அறையில் என்றும் அது இருக்கும். அந்த பேட்டில் விராட் கோலியின் ஆட்டோகிராபை கூட பெற்றுக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.