ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதிரடி சதம்...கே.எல்.ராகுல் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து அபிஷேக் சர்மாவுடன் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார். இதில் கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா 46 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த அடுத்த பந்திலேயே அபிஷேக் சர்மா அவுட் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி தனது இன்னிங்சை ஆடி வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் கே.எல்.ராகுல் சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்துள்ளார்.
அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிவேக சதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் (46 பந்து) சாதனையை அபிஷேக் சர்மா (46 பந்து) சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா (35 பந்து) முதல் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் (45 பந்து) 2வது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிவேக சதம் (பந்துகள் அடிப்படையில்):
ரோகித் சர்மா - 35 பந்து
சூர்யகுமார் யாதவ் - 45 பந்து
கே.எல்.ராகுல் - 46 பந்து
அபிஷேக் சர்மா - 46 பந்து