உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது ஆடுகளத்திற்குள் புகுந்து இடையூறு செய்த ரசிகர் மீது வழக்குப்பதிவு


உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது ஆடுகளத்திற்குள் புகுந்து இடையூறு செய்த ரசிகர் மீது வழக்குப்பதிவு
x

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது.

அகமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா நேற்று மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இதனிடையே, இறுதிப்போட்டியில் இந்தியா பேட்டிங் செய்தபோது 14வது ஓவரில் ஆடுகளத்திற்குள் புகுந்த ரசிகர் ஆட்டத்தில் இடையூறு ஏற்படுத்தினார். மேலும், அவர் முகத்தில் முகமூடியுடன், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக டி-சர்ட் அணிந்துகொண்டு விராட் கோலி நோக்கி வேகமாக ஓடி வந்தார்.

இதையடுத்து, மைதானத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வென் ஜான்சன் என்பது தெரியவந்தது. கோலியின் தீவிர ரசிகரான ஜான்சன் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் டி-சர்ட் அணிந்தவாறு ஆடுகளத்திற்குள் புகுந்து ஆட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது தெரியவந்தது.

இந்நிலையில், ஆடுகளத்திற்குள் புகுந்து இடையூறு ஏற்படுத்திய ஜான்சனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story