பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 26-ந் தேதி தொடக்கம்


பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 26-ந் தேதி தொடக்கம்
x

பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை,

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சார்பில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சாய்ராம் கல்வி நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ், பிரேயர் இன்டர்நேஷனல் ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் வருகிற 26-ந் தேதி முதல் ஜனவரி 22-ந் தேதி வரை நடக்கிறது. இரண்டு சுற்றாக நடத்தப்படும் இந்த போட்டியில் மொத்தம் 86 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் நாக்-அவுட் முறையில் நடைபெறும் முதல் சுற்று ஆட்டங்கள் சென்னை, திருச்சி, விழுப்புரம், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் வருகிற 26-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை நடக்கின்றன.

இதன் முடிவில் சென்னை மாவட்டத்தில் இருந்து முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும் மற்ற மாவட்டங்களில் இருந்து 6 அணிகளும் 2-வது சுற்றுக்கு முன்னேறும். 2-வது சுற்று ஆட்டம் நெல்லையில் ஜனவரி 18-ந் தேதி முதல் 22-ந் தேதி நடைபெறும். இறுதிப்போட்டி மின்னொளியில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான பரிசு கோப்பை மற்றும் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கோப்பை மற்றும் சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, சாய்ராம் கல்வி நிறுவன தலைமை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, இந்தியா சிமெண்ட்ஸ் மார்க்கெட்டிங் தலைவர் ஷசாங் சிங், பிரேயர் இன்டர்நேஷனல் நிறுவன நிர்வாக இயக்குனர் சீனிவாச ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story