500 போட்டிகளில் விளையாடியது நல்ல மைல்கல்... இன்னும் 500 போட்டிகள் வரும் என்று நம்புகிறேன் - சுனில் நரைன்
ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டம் டி20 கிரிக்கெட்டில் சுனில் நரைனின் 500-வது போட்டியாக அமைந்தது.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 1 விக்கெட் எடுத்து பேட்டிங்கில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 47 (22) ரன்கள் குவித்து சிறப்பாக செயல்பட்ட சுனில் நரைன் ஆட்டநாயகன் விருது வென்றார்.
முன்னதாக இந்த போட்டி டி20 கிரிக்கெட்டில் அவருடைய 500-வது போட்டியாகும். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேசம், கரீபியன் லீக், ஐ.பி.எல். போன்ற அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் அவர் இதுவரை 500 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்த போட்டியில் அசத்திய நரைன், 1000 டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:-
"500 போட்டிகளில் விளையாடியது நல்ல மைல்கல். இங்கிருந்து என்னிடம் இன்னும் 500 போட்டிகள் வரும் என்று நம்புகிறேன். இது வெறும் தன்னம்பிக்கை மற்றும் பயிற்சியாளர்கள் கொடுக்கும் ஆதரவின் வெளிப்பாடாகும். அத்துடன் கடின உழைப்பும் உள்ளது. பவர் பிளே ஓவர்கள் மிகவும் கடினமான ஓவர்களாகும். இருப்பினும் அதில் நாம் சென்று இறுக்கமாக பந்து வீச வேண்டும். அது வெற்றி பெறும் போது உதவும். எங்களுடைய அணியில் விரும்புவதை செய்வதற்கான முழு சுதந்திரம் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.