ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அதிரடி: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புளோரிடா,
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 4வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மேயர்ஸ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரண்டன் கிங் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனை தொடர்ந்து ஷாய் ஹோப் களமிறங்கினார். அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்களான நிக்கோலஸ் பூரன் மற்றும் கேப்டன் ரோவ்மேன் பவல் இருவரும் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஹெட்மயர், தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அவர் 39 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், சாஹல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக தொடங்கிய இந்த ஜோடியினர் அதிரடியாக ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.
தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளார்கள் இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இறுதியில் வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டநிலையில் சுப்மன் கில் 47 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். அடுத்ததாக ஜெய்ஸ் வாலுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதிவரை சிறப்பாக ஆடிய ஜெய்ஸ் வால் 84 (51) ரன்களும், திலக் வர்மா 7 (5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 17 ஒவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் ஷெப்பர்டு ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-2 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சமநிலையில் உள்ளன. இரண்டு அணிகளுக்கு எதிரான 5-வது மற்றும் இறுதி டி 20 போட்டி நாளை நடைபெறுகிறது.