3-வது டி20 போட்டி: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
இங்கிலாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கராச்சி,
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்ததால் தொடர் 1-1 என சமனடைந்து இருந்தது.
3வது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக பில் சால்ட்- வில் ஜாக்ஸ் களமிறங்கினர். முகமது ஹஸ்னைன் பந்துவீச்சில் முகமது நவாசிடம் கேட்ச் கொடுத்து பில் சால்ட் (8 ரன்கள்) ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 40 ரன்கள் அடித்து சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
பின்வரிசையில் பென் டக்கெட்- ஹாரி ப்ரூக் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். சிக்சர் மழைகளை பொழிந்த ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ரன்களும், பென் டக்கெட் 42 பந்துகளில் 70 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது. 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் பாபர் மற்றும் ரிஸ்வான் தலா 8 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
அந்த அணியில் ஒருமுனையில் ஷான் மசூத் நிலைத்து நின்று அதிரடி காட்டினாலும் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. குஷ்தில் ஷா தனது பங்கிற்கு 29 ரன்கள் எடுத்து ஆட்டழிந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.