நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் (டி.எல்.எஸ். முறை) ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
ஆக்லாந்து,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 10.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தநிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹெட் 33 ரன்களும், மேத்யூ ஷாட் 27 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆட்டம் டி.எல்.எஸ். முறைக்கு மாற்றப்பட்டது. இதன்படி நியூசிலாந்து அணிக்கு 10 ஓவர்களில் 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 40 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் (டி.எல்.எஸ். முறை) ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது.