2வது டெஸ்ட் போட்டி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ்
4வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனைதொடர்ந்து 22 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிர்க் மெக்கன்ஸி 41 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஸ்டார்க் மற்றும் கிரீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 156 ரன்களே தேவைப்பட்ட நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஸ்டீவ் சுமித் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அதில் கிரீன் 42 ரன், டிராவிஸ் ஹெட் 0 ரன், மார்ஷ் 10 ரன், கேரி 2 ரன், ஸ்டார்க் 21 ரன், கம்மின்ஸ் 2 ரன், லயன் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்தது.