4-வது நாள் முடிவில் வங்காளதேச அணி 268/7 ... வெற்றி வாய்ப்பில் இலங்கை


4-வது நாள் முடிவில் வங்காளதேச அணி 268/7 ... வெற்றி வாய்ப்பில் இலங்கை
x

இலங்கை 511 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது

சட்டோகிராம்,

வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி இலங்கையின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.பின்னர் 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 455 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சில் 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணி 510 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் 4-ம் நாள் முடிவில் வங்களாதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற இன்னும் 243 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை 5வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. மீதம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்பதால் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.


Next Story