ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்..!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்..!
x

image courtesy; twitter/@ICC

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 318 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

மெல்போர்ன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 96.5 ஓவர்களில் 318 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 63 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 10 ரன்களில் லயன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த அப்துல்லா ஷபீக் மற்றும் ஷான் மசூத் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் பாபர் ஆசம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களுடன் தடுமாறி வருகிறது. முகமது ரிஸ்வான் 29 ரன்களிலும், அமீர் ஜமால் 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Next Story