2-வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி பெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கொழும்பு,
இந்தியா -இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு இன்னிங்சின் முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சிராஜ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே நிசாங்கா அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்,
பின்னர் கை கோர்த்த அவிஷ்கா - குசல் மெண்டிஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவிஷ்கா 40 ரன்களிலும், மெண்டிஸ் 30 ரன்களிலும் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சமரவிக்ரமா 14 ரன்களிலும், அசலன்கா 25 ரன்களிலும், ஜனித் லியானகே 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிடில் ஓவர்களில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர்.
இறுதி கட்டத்தில் வெல்லலகே (39 ரன்கள்), கமிந்து மெண்டிஸ் (40 ரன்கள்) பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.