2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி...இங்கிலாந்தில் நடக்க வாய்ப்பு - வெளியான தகவல்?
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
துபாய்,
ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்ற ஐசிசி அறிமுகப்படுத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கவுரவமிக்கதாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, தோல்வி, டிரா ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கான அணிகள் தேர்வாகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் கடந்த 2021ம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்த முதலாவது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2வது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் சீசனுக்கான இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2027ம் ஆண்டில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டியும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் மட்டும் ஏன் இறுதிப்போட்டியை வைக்க வேண்டும். இறுதிப்போட்டியை இங்கிலாந்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.