பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ந்து உலக சாதனை படைத்து வரும் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி..!


பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ந்து உலக சாதனை படைத்து வரும் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி..!
x
தினத்தந்தி 19 March 2022 5:14 PM IST (Updated: 19 March 2022 5:14 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அணியின் ஜூலன் கோஸ்வாமி, 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

ஆக்லாந்து,

2022ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் விளையாடியதன் மூலம், இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடி  இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார். அவர் இதுவரை 230 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கோஸ்வாமி இணைந்துள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்காளத்தை சேர்ந்த 39 வயதான கோஸ்வாமி, ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

20 ஆண்டுகளாக கிரிகெட் போட்டிகளில் விளையாடி வரும் இவர், 5 முறை உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். 

மேலும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். 39 வயதான அவர், 5 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடி, (2005, 2009, 2013, 2017, 2022) மொத்தம் 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதற்கிடையே, அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. சுசந்தா தாஸ் இயக்கும் இந்த படம் இந்தி மொழியில் தயாராகிறது. 

அவரது சொந்த ஊரான மேற்கு வங்காள மாநிலம் சக்தஹாவில் இருந்து உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய லண்டன் லார்ட்ஸ் வரை படப்பிடிப்பு நடக்கிறது. 

ஜூலன் கோஸ்வாமி கதாபாத்திரத்தில், பிரபல இந்தி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story