இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியில் அக்ஷர் பட்டேல் சேர்ப்பு!
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு) ஆட்டமாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க தொடர் மற்றும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இடம் பெறாத சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியை எட்டி இருப்பதால் அவர் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டு, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காயத்தில் இருந்து அக்ஷர் பட்டேல் முழுமையாக மீளாததால் அவருக்கு மாற்றாக தான் குல்தீப் யாதவ் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது அக்ஷர் பட்டேல் முழு உடல் தகுதியை எட்டி இருப்பதால் அணிக்கு திரும்பி இருக்கிறார். மேலும் இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார்’ என்றார்.
Related Tags :
Next Story