இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் - கொழும்பில் இன்று நடக்கிறது


இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் - கொழும்பில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 18 July 2021 7:19 AM IST (Updated: 18 July 2021 7:19 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக இன்று கொழும்பில் நடக்கிறது.

கொழும்பு, 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதே சமயம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2-ம்தர இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது. இதன்படி இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

இந்த தொடர் முதலில் கடந்த 13-ந்தேதி தொடங்க இருந்தது. இலங்கை அணி ஊழியர்கள் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அதிகரிப்பு காரணமாக 5 நாள் தாமதமாக இப்போது தொடங்குகிறது.

வழக்கமாக இலங்கையில் போட்டி நடந்தால் அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில் உள்ளூர் சூழலை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் தற்போது புதிய கேப்டன் ஷனகா தலைமையில் போதிய அனுபவம் இல்லாத வீரர்களே அதிக அளவில் உள்ளனர். தவிர இங்கிலாந்து தொடரின் போது கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி ஒழுங்கீன பிரச்சினையில் மாட்டிக்கொண்ட டிக்வெல்லா, குணதிலகா, குசல்மென்டிஸ் ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர். முந்தைய தொடருக்கான கேப்டன் குசல் பெரேரா காயத்தால் விலகினார். ஊதிய ஒப்பந்த விவகாரத்தால் ஆல்-ரவுண்டர் மேத்யூசும் பின்வாங்கி விட்டார். இதனால் இலங்கை அணி பலவீனமாக தென்படுகிறது.

எனவே இந்திய அணி வெற்றியோடு தொடரை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், பும்ரா, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியில் திறமைக்கு பஞ்சமில்லை.

அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியஅணியில் ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்கும் முயற்சியுடன் இந்திய இளம் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிக்காட்டும் முனைப்புடன் உள்ளதால் அந்த வகையில் இலங்கை தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

கேப்டன் ஷிகர் தவானுடன் தொடக்க ஆட்டக்காரராக பிரித்வி ஷா இறங்குகிறார். முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்தும் தவான் இன்னும் 23 ரன் எடுத்தால் 6 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார். மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே வலுசேர்க்கிறார்கள். அனேகமாக இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளா்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு முதல் ஆட்டத்தில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

இவ்விரு அணிகளும் இதுவரை 159 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 91-ல் இந்தியாவும், 56-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. எஞ்சிய 11 ஆட்டங்களில் முடிவில்லை.

இந்திய அணி இலங்கை மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக நேரடி ஒரு நாள் தொடரில் ஆடுவது இது 9-வது முறையாகும். இதில் கடைசி 4 ஒரு நாள் தொடர்களை இந்திய அணி வரிசையாக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேகமூட்டம் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், நவ்தீப் சைனி அல்லது தீபக் சாஹர், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி அல்லது ராகுல் சாஹர், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, பதும் நிசாங்கா, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, பானுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, உதனா, லக்ஷன் சன்டகன், துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story