புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை வெளியீடு: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் புதிய தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை
இந்திய கிரிக்கெட் அணி கடந்த பிப்ரவரி, மார்ச்சில் உள்நாட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் அணிகளின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட (அப்டேட்) புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2017-18-ம் ஆண்டுக்குரிய போட்டிகளின் முடிவுகள் நீக்கப்பட்டன. தற்போதைய ‘அப்டேட்’ மூலம் 2020-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் 100 சதவீதம் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளின் முடிவு 50 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் கூடுதலாக ஒரு புள்ளி பெற்று மொத்தம் 121 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதே போல் 2 புள்ளியை கூடுதலாக பெற்ற நியூசிலாந்து 120 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு சரிவுஇதுவரை 3-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2017-18-ம் ஆண்டில் இ்ங்கிலாந்தை 4-0 என்ற கணக்கில் வென்ற முடிவு நீக்கப்பட்டதால் 5 புள்ளிகளை இழந்துள்ள ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் இந்த சரிவை சந்தித்து இருக்கிறது. 4-ல் இருந்த இங்கிலாந்து அணியின் புள்ளி எண்ணிக்கை 3 அதிகரித்து மொத்தம் 109 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. அதே சமயம் 9 புள்ளிகளை பறிகொடுத்த தென்ஆப்பிரிக்கா 80 புள்ளிகளுடன் 6-ல் இருந்து 7-வது இடத்துக்கு சறுக்கியது. டெஸ்ட் தரவரிசை வரலாற்றில் தங்களது முந்தைய மோசமான நிலையை சமன் செய்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரவரிசையில் இரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசின் சிறந்த தரநிலை இதுவாகும்.
புதுப்பிக்கப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் வருமாறு:-
1. இந்தியா (121 புள்ளி)
2. நியூசிலாந்து (120)
3. இங்கிலாந்து (109)
4. ஆஸ்திரேலியா (108)
5. பாகிஸ்தான் (94)
6. வெஸ்ட் இண்டீஸ் (84)
7. தென்ஆப்பிரிக்கா (80)
8. இலங்கை (78)
9. வங்காளதேசம் (46)
10. ஜிம்பாப்வே (35)