‘அஸ்வின், ஜடேஜாவுக்கு மாற்றாக என்னை நினைக்கவில்லை’; குல்தீப் யாதவ் பேட்டி


‘அஸ்வின், ஜடேஜாவுக்கு மாற்றாக என்னை நினைக்கவில்லை’; குல்தீப் யாதவ் பேட்டி
x
தினத்தந்தி 9 Oct 2017 10:15 PM (Updated: 9 Oct 2017 8:32 PM)
t-max-icont-min-icon

‘அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக என்னை நினைக்கவில்லை’ என்று குல்தீப் யாதவ் தெரிவித்தார்.

கவுகாத்தி,

மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதால் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடரில் அபாரமாக பந்து வீசி வரும் குல்தீப் யாதவ் கவுகாத்தியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மூன்று வடிவிலான போட்டியிலும் இந்திய அணிக்கு தொடர்ந்து சீரான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு மாற்றாக என்னை நான் நினைக்கவில்லை. நானும், சாஹலும் மிகவும் குறைந்த வயது உடையவர்கள். இன்னும் எங்களுக்கு நிறைய ஆட்ட வாய்ப்புகள் எஞ்சி இருக்கிறது.

நான் புதிரான பந்து வீச்சாளர் இல்லை. என்னை பொறுத்தமட்டில் அடிப்படை வி‌ஷயங்களில் கவனம் செலுத்தி துல்லியமான அளவில் சரியான முறையில் பந்து வீசினால் பேட்ஸ்மேன்களை வீழ்த்தலாம். பந்தை நன்றாக திருப்புவதுடன், சரியான இடத்தில் வேறுபாடுகளுடன் வீசினால் பேட்ஸ்மேனை சாய்க்க முடியும்.

20 ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன் யார் என்பது பற்றி அதிகம் சிந்திக்காமல் உங்களது பலத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செயல்பட்டால் வெற்றி பெறலாம். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் பிராட் ஹாக், ஷேன் வார்னே ஆகியோர் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிறுவயது முதலே ஷேன் வார்னே ஆட்டத்தை நான் பின்தொடர்ந்து வருகிறேன்.

இருவரிடமும் இருந்து நான் நிறைய வி‌ஷயங்கள் கற்று இருக்கிறேன். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். சீனியர் வீரர்களுடன் பேசுவதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். சாஹலுக்கும், எனக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்து வருகிறது. கடந்த 5 வருடங்களாக இருவரும் பழகி வருகிறோம். எங்களது திட்டம் என்ன? என்பதை இருவரும் எளிதில் புரிந்து கொள்வது இணைந்து சிறப்பாக செயல்பட வழிவகுக்கிறது.  இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

ரஞ்சி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வரும் ஆர்.அஸ்வின் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று அவசரப்படவில்லை. நான் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒருநாள் எனக்கான வாய்ப்பு வீட்டு கதவை தட்டும். நான் பெரிய தவறு எதுவும் செய்துவிடவில்லை.

எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது என் திறமையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி அணிக்கு பங்களிப்பேன். உடல் தகுதி வி‌ஷயத்தில் நிர்வாகத்தின் முடிவுக்கு நானும் கட்டுப்பட்டவன். அமைப்பின் திட்டத்துக்கு இணையாக என்னை வளர்த்து கொள்ள முயற்சிப்பேன்’ என்று தெரிவித்தார்.

Next Story