ஆஸ்திரேலியா–வங்காளதேசம் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் சிட்டகாங்கில் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா–வங்காளதேசம் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் இன்று தொடங்குகிறது.
சிட்டகாங்,
ஆஸ்திரேலியா–வங்காளதேசம் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் இன்று தொடங்குகிறது.
அதிர்ச்சி தோல்விஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. மிர்புரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்திடம் தோல்வி கண்டது இதுவே முதல்முறையாகும்.
வங்காளதேச அணியில் தமிம் இக்பால் பேட்டிங்கிலும், ஷகிப் அல்–ஹசன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் அசத்தினார்கள். ஷகிப் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினார்கள்.
கடைசி டெஸ்ட் கிரிக்கெட்இந்த நிலையில் ஆஸ்திரேலியா–வங்காளதேச அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ரன் சேர்க்க தடுமாறி வருவதால் அவருக்கு பதிலாக பீட்டர் ஹேன்ட்ஸ்கோம் விக்கெட் கீப்பிங் பணியை செய்வார் என்று கேப்டன் ஸ்டீவன் சுமித் சூசகமாக தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடரை வெல்ல வங்காளதேச அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தோல்வியில் இருந்து மீண்டு வருவதுடன் தொடரை இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணி முழு வேகத்தையும் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. முந்தைய ஆட்டத்தை போல் இதிலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆட்டத்தில் மழை குறுக்கிடு செய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தரவரிசையில் பாதிப்புஇந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தால் தரவரிசையில் முதல்முறையாக 6–வது இடத்துக்கு சறுக்கும். வெற்றி அல்லது டிரா கண்டால் தர வரிசையில் 4–வது இடத்தில் இருந்து 5–வது இடத்துக்கு சரியும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்–1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் நல்ல திறமையை வெளிப்படுத்தி இந்த போட்டியை வெல்வோம் என நம்புகிறேன்’ என்றார். வங்காளதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் அளித்த பேட்டியில், ‘நெருக்கடியில் இருப்பதை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உணர்வார்கள். வழக்கமாக முந்தைய நாளில் ஆடும் லெவன் அணியை அறிவிக்கும் ஆஸ்திரேலியா இந்த போட்டிக்கான லெவன் அணியை அறிவிக்கவில்லை. ஆஸ்திரேலியா மிகவும் வலுவான அணியாகும். அவர்கள் சரிவில் இருந்து மீண்டு வரக்கூடியவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். எங்கள் அணி வீரர்கள் புத்துணர்ச்சியுடனும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையிலும் உள்ளனர். நாங்கள் சரியாக செயல்பட்டால் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வரும் என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.