இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இன்று நேர்காணல்


இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இன்று நேர்காணல்
x
தினத்தந்தி 9 July 2017 11:15 PM (Updated: 9 July 2017 7:41 PM)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் இன்று நடக்கிறது. ரவிசாஸ்திரி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் இன்று நடக்கிறது. ரவிசாஸ்திரி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி பொறுப்பில் இருந்து விலகினார்.

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து இந்திய முன்னாள் வீரர்கள் ரவிசாஸ்திரி, ஷேவாக், லால்சந்த் ராஜ்புத், டோட்டா கணேஷ், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, தென்ஆப்பிரிக்காவின் லான்ஸ் குளுஸ்னர், பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளரான இங்கிலாந்தின் ரிச்சர்ட் பைபஸ், ஓமன் அணியின் தேசிய பயிற்சியாளர் ராகேஷ் ஷர்மா, வெஸ்ட் இண்டீசின் பிலிப் சிமோன்ஸ், கிரிக்கெட் பின்னணி எதுவும் இல்லாத 30 வயதான இந்திய மெக்கானிக்கல் என்ஜினீயர் உபேந்திரநாத் பிரமச்சாரி ஆகியோர் பயிற்சியாளர் பதவியை குறி வைத்து விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணலை இன்று பிற்பகல் 1 மணிக்கு மும்பையில் நடத்துகிறது. தெண்டுல்கர் லண்டனில் இருப்பதால் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இதில் பங்கேற்பார்.

விண்ணப்பம் அளித்தவர்களில் முதன்மையானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 6 பேரிடம் அதாவது ரவிசாஸ்திரி, ஷேவாக், டாம் மூடி, சிமோன்ஸ், பைபஸ், ராஜ்புத் ஆகியோரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இ-மெயில் மூலம் ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுவிட்டது.

ஒவ்வொருவரிடமும் இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு எந்த மாதிரியான திட்டங்கள் வைத்துள்ளர்கள் என்பதே பிரதான கேள்வியாக கேட்கப்படும். அழைக்கப்பட்டுள்ள 6 பேரில் ரவிசாஸ்திரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 55 வயதான ரவிசாஸ்திரி இதற்கு முன்பு இந்திய அணியின் இயக்குனராக பணியாற்றியபோது விராட் கோலியுடன் எந்தவித சர்ச்சைகளும் இன்றி இணக்கமான உறவு வைத்திருந்தார். கோலி மற்றும் சக வீரர்களின் அமோக ஆதரவு சாஸ்திரிக்கு அதிகமாக உள்ளது.

ஆனால் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். கடந்த முறையும் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார். அப்போது அவரிடம் ‘ஸ்கைப்’ வழியாக நேர்காணல் நடத்தப்பட்ட சமயத்தில் அங்கு கங்குலி இல்லை. இதை ஒரு பெரிய குற்றச்சாட்டாக கிளப்பிய ரவிசாஸ்திரி, வேண்டுமென்றே கங்குலி தன்னை புறக்கணித்ததாக கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த கங்குலி, இவ்வளவு பேசுபவர் நேர்காணலுக்கு நேரில் வந்திருக்க வேண்டாமா? என்று சாடினார்.

இப்படிப்பட்ட சூழலில் கங்குலி மீண்டும் நேர்காணல் நடத்த உள்ளதால் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

நேர்காணலுக்கு பிறகு இன்றே புதிய பயிற்சியாளர் யார் என்ற விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிற்சியாளர் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை பதவியில் தொடருவார்.

Next Story