20 ஓவர் உலக கோப்பை: ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்யுமா ஆஸ்திரேலியா?


20 ஓவர் உலக கோப்பை: ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்யுமா ஆஸ்திரேலியா?
x

image courtesy: Afghanistan Cricket Board twitter

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்யும் முனைப்புடன் இன்று அந்த அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது.

அடிலெய்டு,

20 ஓவர் உலக கோப்பை தொடரில் அடிலெய்டில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானை (குரூப் 1) எதிர்கொள்கிறது.

2 வெற்றி (இலங்கை, அயர்லாந்துக்கு எதிராக), ஒரு தோல்வி (நியூசிலாந்துக்கு எதிராக), ஒரு முடிவில்லை (இங்கிலாந்துக்கு எதிராக ) என்று 5 புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலிய அணி ரன்-ரேட்டில் வெகுவாக பின்தங்கி இருக்கிறது. இதனால் அந்த அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அதனை செய்தாலும் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்குரிய கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே ஆஸ்திரேலியாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும். குறிப்பாக நியூசிலாந்து அணி, அயர்லாந்திடம் வீழ்ந்தால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் தீரும்.

அயர்லாந்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டிம் டேவிட் ஆகியோர் தசைப்பிடிப்பு காயம் அடைந்தனர். இதனால் அவர்கள் இருவரும் இந்த ஆட்டத்தில் களம் காணுவார்களா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. 'உடல் தகுதி சோதனையின் போது ஒரு சதவீதம் திருப்தியில்லை என்றால் கூட விளையாடமாட்டேன். இருப்பினும் நான் விளையாடுவதற்கு 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்' என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். பிஞ்ச் ஆடாவிட்டால் மேத்யூ வேட் கேப்டன் பணியை கவனிப்பார்.

முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 2 தோல்வி (இங்கிலாந்து, இலங்கைக்கு எதிராக), 2 முடிவில்லையுடன் (நியூசிலாந்து, அயர்லாந்துக்கு எதிராக) 2 புள்ளி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. சூப்பர்12 சுற்றில் வெற்றி பெறாத ஒரே அணியான ஆப்கானிஸ்தான், ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப தீவிரமாக முயற்சிக்கும்.

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். அதே நேரத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் மோதி இருக்கின்றன. மூன்றிலும் ஆஸ்திரேலியா வென்று இருக்கிறது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய ஆயுதமாக விளங்கும் சுழற்பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் குடைச்சல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) அல்லது கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட் அல்லது ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், உஸ்மான் கானி, இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், குல்படின் நைப், முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முஜூப் ரகுமான், பரீத் அகமது, பாசல்ஹக் பரூக்கி.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story