உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா-இலங்கை இன்று மோதல்
உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
பெர்த்,
உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை கிரிக்கெட்
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரைஇறுதிக்குள் நுழையும்.
இன்று நடக்கிறது
குரூப்1-ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மோதுகின்றன. இந்த ஆட்டம் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. 200 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 111 ரன்களில் அடங்கி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கேப்டன் பிஞ்ச், மேக்ஸ்வெல், டிம் டேவிட், மிட்செட் மார்ஷ் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இருந்தும் சரியாக சோபிக்காததால் தோல்வி அடைந்தனர்.
வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க், கம்மின்ஸ் சரிவர பந்து வீசவில்லை. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்த ஆட்டத்திலும் தோற்றால் ஆஸ்திரேலிய அணியின் அரைஇறுதி கனவு தவிடுபொடியாகி விடும். இதனால் அந்த அணி வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை
இலங்கை அணி கடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் குஷால் மெண்டிஸ் நல்ல பார்மில் உள்ளார். பந்துவீச்சில் தீக்ஷனா, ஹசரங்கா, சமீரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்திலும் ெவற்றி பெற அந்த அணி முயற்சிக்கும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.