நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
லண்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 3 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளும் நியூசிலாந்து 1 வெற்றியும் பெற்றிருந்தன.
இந்நிலையில், இந்த தொடரை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பந்துவீசியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ 13 ரன்களில் கேட்ச் வெளியேற, மலான் நிலைத்து நின்று ஆடினார். கேப்டன் ஜாஸ் பட்லர் 36 ரன்களும், ஜோ ரூட் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். லிவிஸ்டன் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் சதம் விளாசிய டேவிட் மலான் 127 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 311 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்தில் அதிகபட்சமாக ரச்சின் ரவிச்சந்திரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 312 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. வில் யங் மற்றும் டெவான் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் டெவான் கான்வே 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் 41 ரன்களிலும், வில் யங் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ரச்சின் ரவிச்சந்திரா சற்று நிலைத்து நின்று ஆடி அரைசத்தை கடந்தார். கேப்டன் டாம் லாதம் 13 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 25 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதிகபட்சமாக ரவிச்சந்திரா 61 ரன்கள் எடுத்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இங்ன்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.