20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் கவுண்ட்டவுன் தொடங்கியது..!
16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 100 நாள் கவுண்ட்டவுன் தொடங்கியது.
மெல்போர்ன்,
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான 100 நாள் கவுண்ட்டவுனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று தொடங்கியது. 4 கண்டங்களை சேர்ந்த 13 நாடுகளில் 35 இடங்களுக்கு இந்த உலக கோப்பை எடுத்து செல்லப்படுகிறது. ஜெர்மனி, கானா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இதில் அடங்கும்.
கவுண்ட்டவுன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், 'ஒவ்வொரு உலக கோப்பை போட்டியும் கடினமானது. தங்களுக்குரிய நாளாக அமைந்தால் எந்த அணியாலும் எதிராளியை தோற்கடிக்க முடியும்.
உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகுவதற்கு அடுத்து வரும் மாதங்களில் நடக்க உள்ள வெள்ளை நிற பந்து போட்டிகள் மிகவும் முக்கியமானது' என்றார்.