சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம்


சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம்
x

சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம்

நாகப்பட்டினம்

தைப்பூசத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேதாரண்யத்தில் தீர்த்தவாரி நடந்தது.

சிக்கல் சிங்காரவேலவர்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் காலை முதல் சிங்காரவேலவர் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வரும் அமிர்தகர சுப்பிரமணியசாமிக்கு தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சாமிக்கு பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சாமிக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வேதாரண்யம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

தீர்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவம் வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(மார்ச்) 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மாசிமக உற்சவ நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய பட்டோலை வாசித்தல் நிகழ்ச்சி கணபதி புஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து சாமி சன்னதி முன்பு கோவில் ஸ்தலத்தார்கள் கயிலைமலை வேதரத்னம் மற்றும் உபயதார்கள் முன்னிலையில் அலுவல மேலாளர் விஜயகுமார் திருவிழாக்கள் குறித்த பட்டோலை விவரத்தை படித்தார். இக்கோவிலில் தைப்பூசத்தையொட்டி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீரகத்தி விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி விநாயகரை வழிபட்டனர்.


Next Story