திருமண வரம் அருளும் புட்லூர் அங்காளம்மன்


திருமண வரம் அருளும் புட்லூர் அங்காளம்மன்
x

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, புட்லூர் அங்காளம்மன் கோவில். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக சிறப்பு மிக்க ஆலயமாக இந்தக் கோவில் திகழ்கிறது. இந்த அம்மனை பூங்காவனத்தம்மன், அங்காளம்மன் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள்.

முன் காலத்தில் வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு சிவனும், பார்வதியும் வந்தனர். அப்போது களைப்பாக ஓரிடத்தில் அமர்ந்த பார்வதிக்கு, தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றார் சிவபெருமான். கூவம் நதியில் தண்ணீர் எடுக்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சிவனால் உடனடியாக பார்வதி இருந்த இடத்திற்கு வர முடியவில்லை. எனவே அவர் வெள்ளம் வடிவதற்காக காத்திருந்தார். சிவனுக்கு ஒரு கணம் என்பது தேவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் என்பதால், பார்வதியைச் சுற்றிலும் புற்று வளர்ந்துவிட்டது. திரும்பி வந்த சிவபெருமான், பார்வதியைச் சுற்றி புற்று வளர்ந்திருப்பதைப் பார்த்து அங்கேயே நின்று விட்டார். சிவனும், சக்தியும் ஒரே இடத்தில் இணைந்திருப்பதால், இந்தக் கோவிலில் அம்மனுக்கு எதிரில் நந்தி பகவான் இருப்பது விசேஷமாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் சிவனுக்கு பிரதோஷ வழிபாடும், அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு வழிபடுவதும் வழக்கத்தில் உள்ளது. ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்திற்கு நேர் எதிரில் மண் புற்றாக சயன கோலத்தில், பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறார். சுயம்புவாக இருக்கும் புற்று முழுக்க முழுக்க மஞ்சள், குங்குமம் மணக்க அன்னை அருள்பாலிக்கிறார். ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கு திசையில் தலை வைத்து அம்மன் சயனித்திருக்கிறார். மண்புற்று அம்மனுக்கு எதிரில் உள்ள கருவறையில், சூலம் தாங்கி அங்காள பரமேஸ்வரியாய், பூமாலை அலங்காரத்துடன் அன்னை அருளாட்சி செய்கிறார்.

தாண்டவராயன் என்னும் திருநாமத்துடன் நடராஜரும், விநாயகரும் அருகில் உள்ளனர். வெளி பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமான வேப்பமரம் உள்ளது. அதன் கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று உள்ளது. உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அமுதப்பால், இந்தப் புற்றில் அர்ப்பணம் செய்யப்படுகிறது. இந்தப் புற்றை சுற்றி வரும் போது பெண்கள் தங்கள் வேண்டுதலை சொல்லி, தங்கள் புடவை முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து கல் ஒன்றை வைத்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். அதேபோல் திருமணம் ஆகாதவர்கள் மஞ்சள் கயிற்றை எடுத்து வேப்பமரத்தில் மூன்று முடிச்சு கட்டி விடுகிறார்கள். சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது மகா சிவராத்திரி என்பதால், இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரி உற்சவம், ஊர்வலம், அடுத்த நாள் அமாவாசை அன்று மதியம் ஒரு மணி அளவில் மயானக்கொள்ளை சூறை வைபவமும் சிறப்பாக நடைபெறுகிறது.

திருமணம் ஆகாதவர்கள் ஈரத் துணியுடன் கோவிலை 11 முறை சுற்றி, வேப்பமரத்தில் மஞ்சள் கயிறு கட்டி விட்டு சன்னிதியின் உள்ளே சென்று அம்மனை வணங்க வேண்டும். இப்படி 11 வாரங்கள் தொடர்ச்சியாக வழிபட வேண்டும். முதல் ஒன்பது வாரங்கள், ஒரு கனியை அம்மனுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். 10-வது வாரம் கொண்டு வரும் கனியை, அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கி, சாப்பிட வேண்டும். 11-வது வாரம் கொண்டு வரும் கனியை, அம்மன் பாதத்தில் வைத்து வாங்கிச் சென்று, வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிட வேண்டும். அந்த கனி வாடிய பிறகு, அதை புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் விட வேண்டும். இவ்வாறு செய்வதால் திருமண வரம் கிடைக்கும் என்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முதல் வாரத்தில் முந்தானையை கிழித்து, அதில் ஒரு கல்லை வைத்து வேப்பமரத்தில் தொட்டில் கட்டி தொங்கவிட்டு வந்தால் வேண்டுதல் பலிக்கும். இந்த ஆலயம் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக முழு நேரமும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் மதியம் நடை அடைத்து பின்னர் திறக்கப்படும்.

சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கத்தில் பேருந்து மூலமாக புட்லூர் வந்தடையலாம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் ரெயிலில் வந்து புட்லூர் ரெயில் நிலையத்தில் இறங்கியும், இந்த ஆலயத்திற்கு வரலாம்.


Next Story