பக்தர்களின் பாதங்களை தாங்கும் பரத்வாஜ மகரிஷி.. தவசிமேடை கோவிலில் ஜீவசமாதி


Maharishi Bharadwaja jeeva samadhi
x

பரத்வாஜரின் தலை மற்றும் கால் பகுதியை குறிக்கும் வகையில் கோவிலின் முகப்பில் 2 பீடங்கள் அமைந்துள்ளன. அதற்கு நடுவே நடந்துதான் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

திண்டுக்கல் அருகே உள்ள தவசிமேடை கிராமத்தில் மகாலிங்கேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்த இடம் என்பதால் 'தவசிமேடை' என்றும், அந்த மகான்கள் உடலையும், மனதையும் ஒடுக்கி சமாதி ஆனதால், 'ஒடுக்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ மகரிஷி, இங்கு ஆசிரமம் அமைத்து இறைதொண்டும், மக்கள் பணியும் செய்ததாக ஐதீகம். அதன் நினைவாக இங்கே பரத்வாஜர் ஆசிரமம் செயல்படுகிறது.

பூவுலகில் ஒடுக்க யோக நிலையை (ஜீவசமாதி) பெறுவதற்குரிய, 9 தலங்களில் தவசிமேடையும் ஒன்று என்கின்றனர். பரத்வாஜ மகரிஷி பூமியில் இருந்து 116 அடி மேல் எழும்பிய நிலையில் இருந்து மகாலிங்கேசுவரரை அனுதினமும் வழிபட்டு, கடும் தவம் செய்வார். அதன்மூலம் தவசக்திகளை பெற்றார். சிவபெருமான் தனது அடியார்களை உயர்வாக போற்றுவார். அடியார்களின் மீது கருணை கொண்டு நேரில் காட்சி தந்து அருள் தருவார்.

எனவே மகாலிங்கேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதம் தனது திருமேனி மீது படவேண்டும் என பரத்வாஜ மகரிஷி விரும்பினார். அதன்படி கோவிலுக்கு வெளியே பரத்வாஜ மகரிஷியின் ஜீவ சமாதி 16 அடி நீளத்தில் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய தலை, கால் பகுதியை குறிக்கும் வகையில் கோவிலின் முகப்பில் 2 பீடங்கள் அமைந்துள்ளன. அதற்கு நடுவே நடந்துதான் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இதன்மூலம் பரத்வாஜ மகரிஷியின் ஆசிபெற்று, பக்தர்களின் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பரத்வாஜ மகரிஷியைப் போல பல சித்தர்கள். இங்கே தவம் இயற்றியுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டு ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். அதன்படி கும்பானந்தர், மாரிமுத்து, சூரியமூர்த்தி ஆகிய சித்தர்களின் ஜீவசமாதிகள் இங்கே காணப்படுகின்றன.


Next Story