பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கின்றான்


பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கின்றான்
x

எந்த செயலிலும் நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டால் தான் அந்த காரியத்தில் வெற்றிபெற முடியும். ஒரு செயலில் அவசரம் காட்டினால் அதில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் அந்த தவறுகள் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

மனிதன் எப்போதும் அவசரக்காரனாகவே இருக்கின்றான். இறைவனால் படைக்கப்பட்ட காலத்தில் இருந்து அவன் எதிலும் அவசரம் கொண்டே செயல்படுகின்றான். இறைவனால் தடுக்கப்பட்டிருந்தும், சைத்தானின் தூண்டுதலால் அந்தக்கனியை புசிப்பதிலேயே அவன் அவசரம் காட்டினான். இதன்காரணமாக அவன் இறைவனின் சாபத்திற்கு ஆளாகினான். ஆண்டுகள் பல கடந்தாலும் மனிதனின் அவசர புத்தி மட்டும் மாறவே இல்லை.

அதிலும் இன்றைய நவீன யுகத்தில் உள்ள இளைஞர்கள் எதிலும் அவசரத்தன்மையுடனே உள்ளனர். துரித உணவு போல வாழ்க்கையில் எல்லாமே துரிதமாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதையே திருக்குர்ஆன் (70:19) குறிப்பிடும்போது, "நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்" என்று கூறுகின்றது.

மேலும் மனிதன் அவசரப்படுவதில் விருப்பத்துடன் செயல்படுவதாகவும் திருக்குர்ஆன் (75:20) இவ்வாறு குறிப்பிடுகிறது: "எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்".

எந்த செயலிலும் நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டால் தான் அந்த காரியத்தில் வெற்றிபெற முடியும். ஒரு செயலில் அவசரம் காட்டினால் அதில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் அந்த தவறுகள் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

நன்மைகள் நடக்கும்போது மகிழ்ச்சியுடன் இருப்பதும், சோதனைகள் வரும்போது துவண்டு புலம்புவதும் இன்றைய தலைமுறையினரின் வழக்கமாக உள்ளது. நமக்கு வரும் துன்பங்களை எல்லாம் இறைவன் தரும் சோதனைகளாக, நமது இறையச்சத்தை சோதித்துப்பார்க்கும் தேர்வாக இறைவன் அளிக்கின்றான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

"நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!" (திருக்குர்ஆன் 2:155)

அதுபோன்ற சோதனைகளை நாம் பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் இறையச்சத்தை விட்டுவிடாமல் இறைவனிடம் அடிபணிந்து, சோதனைகளை வெல்லும் சக்தியை கேட்க வேண்டும். சோதனைகளில் இருந்து மீண்டு வெற்றிப்பாதையில் செல்ல பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (திருக்குர்ஆன் 2:153)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன் 2:156)

ஒவ்வொரு நபிமார்களும் தங்களுக்கு சோதனைகள் வந்தபோது அதை இறையச்சத்துடன் தான் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

"இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்". (திருக்குர்ஆன் 2:157)

ஏக இறைவனான அல்லாஹ் மீது முழு நம்பிக்கை கொண்டால் நமக்கு துன்பங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். மேலும் இதன் மூலம் கிடைக்கும் இறைவனின் நற்கூலியும் சிறப்பானதாக இருக்கும். இதை திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்தி கூறுகிறது:

"அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்". (திருக்குர்ஆன் 2:194)

"அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்; இதனை அவர்கள் அறிய வேண்டாமா?". (திருக்குர்ஆன் 2:103)

"அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்". (திருக்குர்ஆன் 10:107).

எந்த நிலையிலும் இறையச்சத்துடன் வாழ்வோம். இறைவனின் திருப்பொருத்தத்துடன் சோதனைகளை வென்று சாதனைகள் படைப்போம்.


Next Story