பிள்ளையார்பட்டி கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம்


பிள்ளையார்பட்டி கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம்
x

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

6-ம் நாள் விழாவான மாலை முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. முன்னதாக வெள்ளி யானை வாகனத்தில் யானை தந்தத்துடன் எழுந்தருளிய கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்னர் விநாயகர் கிழக்கு கோபுரம் வழியாக வந்து கோவில் வீதியை சூரனுடன் சுற்றி தெப்பக்குளம் வந்தார். அங்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கற்பகவிநாயகரை வரவேற்று பெண்கள் வண்ண பூக்கோலமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்.

தேரோட்டம்

7-ம் நாள் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மயில் வாகனத்திலும், நாளை இரவு குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் நாள் விழாவான வருகிற 30-ந் தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்தருளலும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.

31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா அன்று காலை கோவில் குளத்தில் தீர்த்தவாரியும், மதியம் உச்சி கால பூஜை மற்றும் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையலும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story