திருமண பாக்கியம் அருளும் ஆடி கிருத்திகை வழிபாடு.. திருச்செந்தூரில் சிறப்பு பூஜை


திருச்செந்தூர் முருகன் கோவில்
x

ஆடி கிருத்திகையில் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

"சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்பது பழமொழி.

அந்த வகையில் ஆடி கிருத்திகையில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் சகலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு தலங்களில் 5 கோவில்கள் மலை மீது அமைந்துள்ளன. ஆனால் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் மட்டுமே கடற்கரையில் அமையப் பெற்ற சிறப்பு பெற்ற தலமாகும். சூரபத்மனை வெற்றிகொண்டதால் இங்கே கோவில் கொண்ட முருகப்பெருமான் 'ஜெயந்திநாதர்' என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே பின்னாளில் மருவி 'செந்தில்நாதர்'' என்று ஆனதாகவும் கூறப்படுகிறது. அதுபோலவே இவ்வூரும் 'திருசெயந்திபுரம்' என்பதில் இருந்து திருச்செந்தூர் என்றானதாக சொல்லப்படுகிறது.

ஆண்டு முழுவதும் திருச்செந்தூர் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. விழாக் காலங்களில் மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

குறிப்பாக ஆடி கிருத்திகையில் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் ஆடி கிருத்திகையில் விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை நாளை (ஜூலை 29) வருகிறது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு பெண்கள் கலந்து கொள்ளும் 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story