கொரோனா நோயாளிகளால் சீனாவில் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
சீனாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
பீஜிங்,
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத்தொடங்கியது. உலக நாடுகளையெல்லாம் இந்தப் பெருந்தொற்று தவிக்க வைத்தது.
இப்போது அமெரிக்கா, இந்தியா என பெரும்பாதிப்புக்கு ஆளான நாடுகள் பலவும் கொரோனாவை பெருமளவில் கட்டுப்படுத்தி விட்டன.
ஆனால் சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக கடுமையான ஊரடங்கு பொது முடக்கங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
ஒரு கட்டத்தில் இது மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வலுத்தன.
இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. பரிசோதனை மையங்கள் மூடப்பட்டன. தனிமைப்படுத்திக்கொள்வது தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் லேசான அறிகுறிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
சீன தூதர் குற்றச்சாட்டு
சீனாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் அதிபர் ஜின்பிங் மற்றும் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக கோஷங்கள் முழங்கப்பட்டன.
இதற்கு வெளிநாட்டு சக்திகள்தான் காரணம் என பிரான்சுக்கான சீன தூதர் லு ஷாயே குற்றம் சாட்டினார்.
மேலும் உள்ளூர் அரசு நிர்வாகங்கள்தான் கொரோனாவை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் அவர் கூறினார்.
நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் அங்கு 15 நாட்களாக கொரோனா (ஒமைக்ரான்) அலை தாண்டவமாடத்தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் யாரையும் விட்டு விடவில்லை. சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள், பீஜிங் தூதரக பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களிலும் கிளினிக்குகளிலும், ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
வாட்டியெடுக்கும் குளிருக்கு மத்தியிலும் நடைபாதை வரை நோயாளிகள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். பலர் கார்களுக்குள் படுத்துக்கொண்டே அவர்களுக்கு 'டிரிப்ஸ்' (குழாய்வழி திரவங்கள்) செலுத்தப்படுகிறது.
இன்னும் பலர் கடுமையான காய்ச்சலுடன் கிளினிக்குகளின் வெளியே காத்திருக்கின்றனர்.
இது தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.