அரசர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் கோகினூர் வைரம் பதித்த கிரீடம் அணிவாரா ராணி கமீலா?


அரசர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் கோகினூர் வைரம் பதித்த கிரீடம் அணிவாரா ராணி கமீலா?
x

இங்கிலாந்து அரசர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் ராணி கமீலா சர்ச்சைக்குள்ளான கோகினூர் வைரம் பதித்த கிரீடம் அணிவாரா? இல்லையா? என்பது பலரது கேள்வியாக உள்ளது.



லண்டன்,


இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் 1952-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ராணியாக ஆட்சி நடத்தியவர். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில், உடல்நல குறைவால் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி காலமானார். இதனை பக்கிங்காம் அரண்மனை முறைப்படி அறிவித்தது.

இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக இளவரசர் 3-ம் சார்லஸ் (வயது 73) அறிவிக்கப்பட்டார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்ற பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடி சூட்டப்படுவார். இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.

இதன்பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ராணி இரண்டாம் எலிசபெத் 1953-ல் முடிசூட்டப்பட்டபோது, 129 நாடுகளை சேர்ந்த 8 ஆயிரம் விருந்தினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு பயணம் செய்தனர். ஆனால் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எளிமையாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த முடிசூட்டு விழாவில், ராணி கமீலா சர்ச்சைக்குரிய கோகினூர் வைரம் பதித்த கிரீடம் அணிந்து வருவாரா? இல்லையா? என்பது பலரது கேள்வியாக உள்ளது. இதுபற்றி பேஜ் சிக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சர்ச்சைக்குரிய அந்த கிரீடம் அணிவதில் இருந்து கமீலா விலகி இருப்பார். ஏனெனில் அது சர்வதேச அளவில் விவாத பொருளாகி விடும். அதனால், அந்த விழாவில் கோகினூர் வைரம் காணப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராணி 2-ம் எலிசபெத்தின் கடைசி மூச்சுவரை கோகினூர் வைரம் அவரிடம் இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர், அந்த வைரம் கமீலாவின் வசம் சென்றுள்ளது.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் சமீபத்திய மறைவுக்கு பின்னர், ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட விலைமதிப்பில்லா பொருட்களை திரும்ப ஒப்படைக்கும்படி டுவிட்டரில் கோரி வருகிறது. இந்திய தரப்பிலும், கோகினூர் வைரம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இங்கிலாந்து அரசியாக இருந்த ராணி விக்டோரியாவுக்கு, 1849-ம் ஆண்டு துலீப் சிங் என்ற இந்திய மகாராஜா 108 காரட் கொண்ட கோகினூர் வைரம் ஒன்றை வழங்கினார். இந்தியாவின் கோகினூரில் எடுக்கப்பட்ட இந்த வைரம் பின்னர் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் கிரீடத்தில் சேர்க்கப்பட்டு அலங்கரித்து வருகிறது.

அந்த கிரீடம், விலைமதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடை கொண்ட 108 காரட் கோகினூர் வைரம் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரம் பதித்த கிரீடம் அணிந்து, அரசின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இங்கிலாந்து ராணிகளின் வழக்கம்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் ஜெகன்னாத் சேனா என்ற அமைப்பு, கோகினூர் வைரம் பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சொந்தமானது என தெரிவித்துள்ளது. பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷாவை போரில் தோற்கடித்தார் என்றும், இந்த வெற்றியின் நினைவாக பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரம் அவரது சார்பில் நன்கொடையாக அளிக்கப்பட்டது என்று ஜெகன்னாத் சேனா அமைப்பாளர் பிரியதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த வைரம் உடனடியாக ஒப்படைக்கப்படவில்லை. ரஞ்சித்சிங் மறைவுக்கு பின்னர் கோகினூர் வைரம், அவரது மகன் துலீப் சிங்கிடம் இருந்து ஆங்கிலேயர்களால் பறித்து செல்லப்பட்டது என்றும் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.

விலைமதிப்பற்ற இந்த வைரம் 14-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது. இதன் வரலாற்றை அறிய சற்று பின்னோக்கி சென்றால், காகத்திய வம்சத்தின் ஆட்சியின்போது, ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் நகரில் இந்த வைரம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வைரம் வாரங்காலில் உள்ள இந்து தெய்வத்தின் சிலையின் ஒரு கண் ஆக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அலாவுதீன் கில்ஜியின் படை தளபதியான மாலிக் கபூரின் படையெடுப்பின்போது இந்த வைரம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின்பு, முகலாய பேரரசின் ஆட்சியாளர்கள் பலரது கைகளில் இந்த வைரம் விளையாடியது.

பல சாம்ராஜ்ஜியங்களை பார்த்த வைரம், கடைசியாக சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் சென்றது. அவர் அதனை லாகூரில் வைத்து இருந்துள்ளார். அதன்பின்பு, அவர் பஞ்சாப்புக்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் திலீப் சிங்கின் ஆட்சி காலத்தில் பஞ்சாப் இணைப்பின் தொடர்ச்சியாக விக்டோரியா அரசியிடம் வைரம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதன்பின்னர், ராணியின் கிரீடத்தில் கோகினூர் வைரம் பதிக்கப்பட்டு உள்ளது. பல சாம்ரஜ்ஜியங்கள் வீழ்ந்து மறைந்த போதும், ராணியின் முடியில் கோகினூர் வைரம் அலங்கார பொருளாக இன்னும் ஜொலித்து கொண்டிருக்கிறது.


Next Story