வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்; தெற்காசிய மக்களை வெகுவாக புகழ்ந்த பைடன்


வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்; தெற்காசிய மக்களை வெகுவாக புகழ்ந்த பைடன்
x

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டத்தில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட அதிபர் பைடன், தெற்காசிய மக்களை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

வாஷிங்டன்,



இந்தியாவில் தீபாவளி பண்டிகை 2 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது. மக்கள் கோலங்களை இட்டும், புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், பலகாரங்களை உண்டும் பண்டிகையை கொண்டாடினார்கள்.

இதேபோன்று, உலகமெங்கிலும் வசித்து வரும் இந்தியர்களும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வம்சாவளி மக்களை அதிகம் கொண்டுள்ள அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டின.

இதனை முன்னிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், தனது மனைவி ஜில் பைடனுடன் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குத்து விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். துணை அதிபர் கமலா ஹாரிசும் இதில் கலந்து கொண்டார். அதிபர் பைடன் தெற்காசிய சமூகத்தினரிடையே பேசும்போது, தெற்காசிய மக்களை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர் பேசும்போது, உலகிற்கு, நாம் ஒவ்வொருவரும் ஒளியை கொண்டு வரக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறோம் என நினைவுப்படுத்துவது இந்த தீபாவளி. அமெரிக்கா அல்லது 75 ஆண்டுகால விடுதலையை கொண்டாடும் இந்தியாவில் வசிக்கும் மக்கள், ஜனநாயகத்திற்கான வாழ்வில் ஒவ்வொரு நாளும் இதனை செய்து வருகிறோம்.

உங்களை வரவேற்பதில் நாங்கள் கவுரவம் அடைகிறோம். வெள்ளை மாளிகையில் இதுவரையில்லாத வகையில் பெரிய அளவில் முதன்முறையாக தீபாவளி வரவேற்பு நிகழ்கிறது. வரலாற்றில் இல்லாத வகையில், அதிகளவிலான ஆசிய-அமெரிக்கர்களை நாம் கொண்டிருக்கிறோம்.

அமெரிக்க கலாசாரத்தின் மகிழ்ச்சிக்குரிய பகுதியாக தீபாவளி கொண்டாட்டங்களை ஆக்கியதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

பெருந்தொற்றில் இருந்து விடுபட்டு வலிமையான நாடாக நாம் வெளிவருவதற்கும், ஒவ்வொருவருக்கும் பயன்படும் பொருளாதார கட்டமைப்பை உருவாக்கியதிலும் தெற்காசிய அமெரிக்கர்கள் உதவியுள்ளனர்.

நமது நாடு, சமூகத்திற்கு சேவை செய்தும், பாதுகாத்தும் வருகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தும், ஒவ்வொருவரையும் அக்கறையுடன் கவனித்து கொண்டு, உரிமைகளையும் மற்றும் சுதந்திரங்களையும் பாதுகாத்து வருகின்றனர் என பைடன் பேசியுள்ளார்.

அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள தெற்காசிய சமூகத்தினருக்கு இந்த நாளில் நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தெற்காசிய அமெரிக்கர்கள் நம்முடன் ஒன்றிணைந்து, நாமெல்லாம் ஒரே தேசம் என்ற ஆன்மாவை பிரதிபலிக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.


Next Story