சீனாவில் விநோதம்... ஒரே இடத்தில் 12 நாட்களாக வட்டமிட்ட செம்மறி ஆடுகள்


செம்மறி ஆடுகளின் விசித்திரமான செயல்பாடு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் மங்கோலியா நகரில் செம்மறி ஆட்டுக் கூட்டம் ஒன்று இடைவிடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரமாக வட்டமிட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இந்த ஆடுகள் இவ்வாறு தொடர்ந்து 12 நாட்கள் இடைவிடாமல் சுற்றி வருவதாக தகவல் பரவி வருகிறது.

ஆடுகளின் இந்த விசித்திரமான செயல்பாட்டுக்கு காரணம் என்ன என்று பலரும் குழம்பி வரும் வேளையில், சிலர் இது வேற்றுகிரக வாசிகளின் செயலாக இருக்கலாம் என்றும், மேலும் சிலர் இது ஒரு அமானுஷ்யமான நிகழ்வு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்டுப் பண்ணையின் உரிமையாளர் கூறும்போது, முதலில் ஒரு சில ஆடுகள் இவ்வாறு சுற்றத் தொடங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து பிற ஆடுகளும் அதனுடன் சேர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் ஆடுகள் அனைத்தும் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ஆடுகளின் இந்த விநோத நடவடிக்கைக்கு 'லிஸ்டீரொயோசிஸ்' என்ற பாக்டீரியா நோய் தொற்று தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோய் கிருமியானது மூளையின் ஒரு பகுதியை தாக்குவதால், ஆடுகள் இதுபோல் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வட்டமிடும் என்றும், இதில் அமானுஷ்யம் எதுவும் இல்லை எனவும் அறிவியலாளர்கள் தெரிவிகின்றனர்.


Next Story