குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள், விளையாட்டுகள்; ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு


குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள், விளையாட்டுகள்; ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
x

ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிக்க கூடிய தோட்டாக்கள் மற்றும் கவச உடைகள் குவியலாக கிடைத்தன.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடுமையான தாக்குதலை தொடுத்தது. ஆயிரக்கணக்கான ராக்கெட் வெடிகுண்டுகளையும் வீசியது. இந்த தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த 1,200 பேர் பலியானார்கள். பலர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதன்பின்பு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, பணய கைதிகள் விடுவிப்பும் நடந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வீரர்கள் மற்றும் வெளிநாட்டினர் என 129 பேர் பணய கைதிகளாக இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். மற்றவர்களின் நிலை தெரியவரவில்லை.

காசாவுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேலும் போரில் ஈடுபட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை அளித்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் காசாவில் 21 ஆயிரத்துக்கும் கூடுதலானோர் பலியாகியுள்ளனர்.

போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டாலும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்ட செய்தியில், காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள பள்ளியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிக்க கூடிய தோட்டாக்கள் மற்றும் கவச உடைகள் குவியலாக கிடைத்தன.

அந்த ஆயுதங்களில் சில, குழந்தைகளின் படுக்கையறையின் உள்ளே காணப்பட்டன. பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்கு அடுத்து அவை கிடந்தன.

இஸ்ரேல் மீது ஆயுதமேந்திய அரேபிய குழந்தைகள் தாக்குவது போன்ற கேம்ஸ்களும் (விளையாட்டுகள்) இருந்தன என தெரிவித்து உள்ளது. அதுபற்றிய புகைப்படம் ஒன்றையும் படையினர் வெளியிட்டனர்.

குழந்தைகளிடம் வன்முறையை தூண்டி விடும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகள் ஆகியன ஹமாஸ் தளபதியின் வீட்டில் இருந்து கிடைத்து உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story