புதினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர்: உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு


புதினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர்: உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா வரவேற்பு
x
தினத்தந்தி 17 Dec 2022 7:59 AM IST (Updated: 17 Dec 2022 8:00 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் மீதான ரஷிய போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வரவேற்றுள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்திருக்கிறது. மேற்கு நாடுகள் உட்பட சர்வதேசளவில் பெரும் எதிர்ப்பை ரஷ்யா சம்பாதித்திருப்பதன் மத்தியில், ரஷியாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கிறது.

இது தொடர்பாக உக்ரைன் தேசம் அதிகாரபூர்வமாக தனது ஆட்சேபத்தை பதிவு செய்தபோதும், இந்தியா தனது முடிவிலிருந்து மாறவில்லை. அதேபோல உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிராக இந்தியா திடமான நிலைப்பாடு எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் சில மணி நேரங்கள் உரையாடினார். இந்த உரையாடல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

உரையாடலின் போது, புதினிடம் உக்ரைனில் நடந்து வரும் மோதல் சூழ்நிலையில், வன்முறைகளையும் நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கான பாதையில் செல்ல அழைப்பதாக மோடி தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வரவேற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் கூறும்போது, "பிரதமர் மோடியின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அந்தக் கருத்துகள் நடக்கும்போது வரவேற்போம்.

மற்ற நாடுகள் ரஷியாவுடனான ஈடுபாடு குறித்து தாங்களாகவே முடிவெடுக்கும். போரின் பாதிப்புகளைத் தணிக்க கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறோம்" என்று கூறினார்.

ரஷியா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியின் அழைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த படேல் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.


Next Story