"தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.." - குவாட் உச்சி மாநாடு குறித்து பிரதமர் மோடி பதிவு
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன்,
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று (செப்.21) பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் விலிமிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றார். பின்னர் குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் குவாட் உச்சி மாநாட்டில் தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், "டெலாவேர், வில்மிங்டனில் இன்றைய உச்சி மாநாட்டின் போது குவாட் தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. மேலும் உலகளாவிய நலனுக்காக குவாட் எவ்வாறு தொடர்ந்து பணியாற்ற முடியும் என்பதில் கவனம் செலுத்தும் விவாதங்கள் பயனுள்ளதாக இருந்தன. சுகாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்" என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.
தனது மற்றொரு பதிவில், "ஐப்பான் பிரதம மந்திரி கிஷிதாவுடன் மிகவும் நல்ல சந்திப்பு இருந்தது. உள்கட்டமைப்பு, குறைக்கடத்திகள், பாதுகாப்பு, பசுமை ஆற்றல் மற்றும் பலவற்றில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. வலுவான இந்தியா-ஜப்பான் உறவுகள் உலகளாவிய செழுமைக்கு உத்தரவாதமாக இருக்கும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தனது மற்றொரு பதிவில், "ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் இன்னும் வேகத்தை சேர்க்க நாங்கள் முயல்கிறோம். ஆஸ்திரேலியாவுடனான நட்புறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மற்றொரு பதிவில், "கலாச்சார தொடர்பை ஆழப்படுத்துதல் மற்றும் கலாச்சார சொத்துக்களின் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துதல். 297 விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்களை இந்தியாவுக்குத் திருப்பித் தருவதை உறுதி செய்ததற்காக ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், அமெரிக்க அரசாங்கத்துக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.