எதிரணி எதுவாக இருந்தாலும் பேட்டிங்கை மிகவும் சுலபமாக்குகிறார் - இந்திய வீரரை புகழ்ந்த பாக்.முன்னாள் கேப்டன்
விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் பாபர் ஆசம் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால், இவர் மிகவும் வித்தியாசமானவர் என்றார்.
லாகூர்,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. மும்பையில் நாளை நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய வாசிம் அக்ரம், சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை போன்ற வீரர் யாரும் இல்லை. விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் பாபர் ஆசம் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால், ரோகித் சர்மா மிகவும் வித்தியாசமானவர். எதிரணி, பந்துவீச்சு எதுவாக இருந்தாலும் அவர் பேட்டிங்கை மிகவும் சுலபமாக்குகிறார்.
ரோகித் சர்மா எதிரணியின் 5 பவுலர்களையும் அடிக்கக்கூடியவர். விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் ஆசம் போன்றவர்கள் எதிரணியின் 3 அல்லது 4 பவுலர்களை குறிவைத்து அடிக்கின்றனர். ஆனால், ரோகித் சர்மா எதிரணியின் 5 பவுலர்களையும் அடிக்கிறார். அணிக்கு தொடக்கத்திலேயே விரைவாக ரன்களை சேர்க்க வேண்டும் என்பது ரோகித் சர்மாவின் நோக்கமாக உள்ளது' என்றார்.