"உக்ரைனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல" - ரஷிய அதிபர் புதின் பேச்சு


உக்ரைனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல - ரஷிய அதிபர் புதின் பேச்சு
x

உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் புதிய தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

அஸ்தானா,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த போருக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உக்ரைனில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான மக்கள், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

இந்த சூழலில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற ரஷியா-மத்திய ஆசிய நாடுகள் இடையிலான மாநாட்டில், ரஷிய அதிபர் புதின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ரஷியாவுடன் நேட்டோ படைகள் நேரடியாக மோதினால், அது உலகளாவிய பேரழிவிற்கு வழி வகுக்கும் என எச்சரித்தார். அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என கூறி வரும் நட்பு நாடுகளான இந்தியா, சீனாவின் நிலைப்பாட்டை ரஷியா மதிப்பாதாக தெரிவித்தார்.

அதே சமயம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என உக்ரைன் அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், உக்ரைனை அழிப்பது ரஷியாவின் நோக்கம் அல்ல என்று தெரிவித்தார். உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் புதிய தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என்று தெரிவித்த அவர், உக்ரைன் படையெடுப்பில் ரஷியா எல்லாவற்றையும் சரியாகவே செய்து வருவதாக குறிப்பிட்டார்.


Next Story