#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் போர் தீவிரம்: 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்
கிழக்கு உக்ரைனில் 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.
Live Updates
- 27 May 2022 10:46 AM IST
செவிரொடொனெட்க்ஸ் நகரில் 1,500 பேர் பலி
உக்ரைனின் டான்பாஸ் மாகாணம் லுகன்ஸ்க் நகரில் உள்ள செவிரொடொனெட்க்ஸ் நகரம் மட்டும் இன்னும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது. லுகன்ஸ்க் நகரின் எஞ்சிய பகுதிகள் அனைத்தும் ரஷிய கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டன.
தற்போது, செவிரொடொனெட்க்ஸ் நகரையும் கைப்பற்ற ரஷிய ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், இந்த நகரில் உக்ரைன் ரஷிய படைகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக செவிரொடொனெட்க்ஸ் நகரில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 60 சதவீத குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
- 27 May 2022 6:00 AM IST
ரெயில் நிலையம் மீது குண்டுவீச்சு
கிழக்கு உக்ரைனில் போக்ரோவ்ஸ்க் ரெயில் நிலையம் மீது ரஷிய போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின. உக்ரைனின் மின்னணு உளவு மையத்தையும் ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. இந்த தகவலை ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கோனஷெங்கோவ் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் 48 உக்ரைன் படையினர், ஆயுதங்கள், 2 வெடிபொருள் கிடங்குகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் மற்ற இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இலக்குகளை ரஷியா பீரங்கி தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் படை வீரர்கள் 8 ஆயிரம் பேர் கிழக்கு உக்ரைனில் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான போரில் ரஷிய அதிபர் புதின் வெற்றி பெறமாட்டார் என்று ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார். ஏற்கனவே அவர் தந்திரோபாய இலக்குகளில் வெற்றிபெற தவறிவிட்டார் எனவும் தெரிவித்தார். தற்போதைய நிலைமையை உக்ரைன் அங்கீகரிக்கும், மாஸ்கோவின் கோரிக்கைகளை ஏற்கும் என்று ரஷிய அதிபர் மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- 27 May 2022 5:13 AM IST
கார்கிவில் 4 பேர் பலி
உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவில் ரஷிய படைகள் குண்டு வீச்சு நடத்தின. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைனில் போர்க்குற்றங்கள் செய்ததாக ரஷிய பீரங்கிப்படையினர் அலெக்சாண்டர் பாபிகின், அலெக்சாண்டர் இவானோவ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்கள் மீது கோர்ட்டு வழக்கு விசாரணையின்போது, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வக்கீல்கள் வாதாடினர்.
குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீதான வழக்கில் 31-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும். நாட்டின் முதல் போர்க்குற்ற வழக்கில் ரஷிய படைவீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
- 27 May 2022 4:40 AM IST
40 நகரங்களில் தாக்குதல்
உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளின் பார்வை கிழக்கு உக்ரைனில் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் 40 நகரங்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.
லுஹான்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் கை மேலோங்கி உள்ளது. வான்வழி தாக்குதலையும், பீரங்கி தாக்குதலையும் ரஷிய படைகள் தீவிரப்படுத்தியதன் விளைவு இதுவாகும். இதை உக்ரைன் படைத்தளபதி ஒப்புக்கொண்டுள்ளார். செவிரோடொனெட்ஸ்க் பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் ஸ்திரமாக உள்ளது.
போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரையில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் மட்டுமே 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இதை உக்ரைன் அரசின் தலைமை வக்கீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 240 ஆகும்.