ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
அமெரிக்க, இங்கிலாந்து படைகளின் தாக்குதலில் 5 பேர் பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி அமைப்பு கூறியுள்ளது.
வாஷிங்டன்,
இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டிப்புடன் தெரிவித்தன. ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு ஈரான் நாடு, ஆயுதங்களை வழங்கி வருவதாக தெரிகிறது. கடந்த வாரம், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்தது. அதை கண்டுகொள்ளாத ஹவுதி அமைப்பினர், சரக்கு கப்பல் மீது நேற்று முன்தினம் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசினர்.
இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர், பதிலடி தாக்குதலை தொடங்குமாறு ஆஸ்பத்திரியில் உள்ள அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினுக்கு ஜோ பைடன் உத்தரவிட்டார். தாக்குதல் திட்டம் குறித்து எம்.பி.க்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஏமன் நாட்டில் அமெரிக்க, இங்கிலாந்து ராணுவங்கள் நேற்று அதிகாலையில் வான்வழி தாக்குதலை தொடங்கின. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் 10-க்கும் மேற்பட்ட தளங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ்.ட்விட் ஐஸ்நோவரில் இருந்து புறப்பட்ட போர் விமானங்களும், விமானப்படை போர் விமானங்களும் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டன. போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. நீர்மூழ்கி கப்பலில் இருந்து 'டொமஹாக்' ஏவுகணைகளும் செலுத்தப்பட்டன.
சாடாவின் கிழக்கு பகுதியில் உள்ள முகாம், டைஸ் நகரில் உள்ள விமான நிலையம், ஹஜ்ஜா அருகே உள்ள விமான நிலையம், தாமர் நகர், அல் ஹுதைதா உள்ளிட்ட இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் 'அல்-மசிரா' டி.வி. சேனல் தெரிவித்தது.
குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். வீட்டு ஜன்னல்கள் அதிர்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அமெரிக்க, இங்கிலாந்து படைகளின் தாக்குதலில் 5 பேர் பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி அமைப்பு கூறியுள்ளது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க தயாராகுங்கள் என அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் பல இடங்களில் அமெரிக்க படைகள் நடத்திய இரண்டாவது சுற்று வான்வெளி தாக்குதல் நடத்திவருவதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஏமனில் ரேடார் வசதியை அமெரிக்கப் படைகள் குண்டுவீசித் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.