வடகொரியா அச்சுறுத்தல்: கூட்டுப்போர் பயிற்சிகளை முறைப்படுத்த தீவிரம்
வடகொரியா அச்சுறுத்தல்களை தடுக்கும் விதத்தில் கூட்டுப்போர் பயிற்சிகளை முறைப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.
டோக்கியோ,
கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர்ச்சியாக பல ஏவுகணை சோதனைகளை நடத்தி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர்ப்பயிற்சியை நடத்தியது.
இதனை நிறுத்தும்படி வடகொரியா எச்சரித்தும் அவை கைவிடாததால் வடகொரியா தனது ஏவுகணை அச்சுறுத்தலை மேலும் அதிகரித்தது. அதன்படி சமீபத்தில் ஜப்பான் கடற்கரை அருகே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அதிசக்தி வாய்ந்த ஹவாசோங்-18 ஏவுகணை சோதனை உள்ளிட்டவற்றை சமீபத்தில் நடத்தியது. இது தனது எதிரி நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளதாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறினார்.
இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும் கூட்டுப்போர் பயிற்சிகளை முறைப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.