அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு
அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியினால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சியோல்,
வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு பிராந்தியத்தில் இருக்கும் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு அவற்றின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க அவ்வப்போது இந்த 3 நாடுகளும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் தங்களது பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுவதை கடுமையாக எதிர்க்கும் வடகொரியா, அந்த 3 நாடுகளையும் எச்சரிக்கும் விதமாக அடிக்கடி ஏவுகணைகளை சோதித்து வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக திட எரிபொருளில் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்து அதிரவைத்தது. அதே சமயம் அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளும் தங்களின் கூட்டு ராணுவ பயிற்சியை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளின் கடற்படைகள் நேற்று கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டன. தென்கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் 3 நாடுகளின் கடற்படைகளும் இணைந்து ஏவுகணை பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முத்தரப்பு கூட்டுப்போர் பயிற்சிக்கு எதிராக வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.