கரீபியன் தீவில் குற்ற சம்பவங்களை தடுக்க அமெரிக்கா உதவி
கரீபியன் தீவில் குற்ற சம்பவங்களை தடுக்க அமெரிக்கா நிதி உதவி அளித்துள்ளது.
நியூயார்க்,
கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிக அளவு குற்றங்கள் நடக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகரிப்பின் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாளர்களால் ஹைதி அதிபர் மோய்சே சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின்னர் ஹைதி அதிபராக ஏரியல் ஹென்றி தற்காலிகமாக பொறுப்பு வகிக்கிறார்.
இந்த நிலையில் நாட்டில் குற்றங்கள் அதிக அளவில் பெருகியதாகவும் அதனை கட்டுப்படுத்த தங்களிடம் போதுமான பொருளாதார வசதி இல்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஹென்றி முறையிட்டார்.
அதன்படி ஹைதி நாட்டுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. கென்யாவுடன் கூட்டு சேர்ந்து ராணுவ வீரர்களை ஹைதியில் களம் இறக்க அமெரிக்கா தலைமையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. முதற்கட்டமாக ஆயிரம் வீரர்களை சோதனை முறையில் களம் இறக்கி ஹைதி நாட்டு ராணுவத்துடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். மேலும் சர்வதேச நாடுகள் சபை உறுப்பினர்களிடமும் உதவிக்கோரப்பட்டுள்ளது.