உக்ரைனுக்கு மேலும் ரூ.23,783 கோடிக்கு ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனுக்கு மேலும் ரூ.23,783 கோடிக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்,
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி நேற்றுடன் 6 மாதம் நிறைவடைந்தது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.
இந்த போரில் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு ஏதுவாக உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வாரி வழங்கி வருகிறது. இதுவரையில் 19 தொகுப்புகளாக ரூ.84,721 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்க வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில் போருக்கு மத்தியில் உக்ரைன் நேற்று தனது 31வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அதையொட்டி உக்ரைனுக்கு மேலும் 2.8 பில்லியன் (சுமார் ரூ.23 ஆயிரத்து 783 கோடி) ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று அறிவித்தார்.
இந்த ராணுவ உதவி வான்பாதுகாப்பு அமைப்புகள், அதிநவீன பீரங்கிகள், டிரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை உள்ளடக்கியது என்றும், இது உக்ரைன் நீண்ட காலத்துக்கு தன்னை தற்காத்து கொள்வதை உறுதி செய்யும் என்றும் ஜோ பைடன் கூறினார்.