இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் கண்டனம்


இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் கண்டனம்
x

இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்களை குறித்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என்றும், கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் போராளிகளின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் வன்முறைகளைத் தவிர்த்து அமைதிக்கான வழியை தேடுமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.


Next Story