குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது - ஐ.நா. சபை அதிகாரி கண்டனம்..!
குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. சபையின் அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,
கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நேற்று முன்தினம் அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், குஜராத் கலவர வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்த நிலையில், போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதனிடையே, செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர் கூறுகையில், "தீஸ்தா வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான வலுவான குரல் கொடுத்து வருபவர். மனித உரிமைகளை பாதுகாப்பது குற்றமல்ல" என்றார்.