ஜி-7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் பங்கேற்பு; ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை துரிதப்படுத்த முயற்சி


ஜி-7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் பங்கேற்பு; ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை துரிதப்படுத்த முயற்சி
x

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகளில் இன்று கலந்துகொள்கிறார்.

பெர்லின்,

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார்.

மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகளில் இன்று கலந்துகொள்கிறார்.

முன்னதாக, நேற்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கீவ் நகரத்தில் இரண்டு குடியிருப்புக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகள் நடைபெறுவதை முன்னிட்டு அழுத்தம் கொடுப்பதற்காகவே, ரஷியா பல வாரங்களுக்கு பின் மீண்டும் கீவ் நகரில் தாக்குதலை தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஷியா மீது தங்கம் இறக்குமதி மீதான தடை அறிவிப்புடன் ஜி7 பேச்சுவார்த்தை தொடங்கியது. ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறியதாவது:- "ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரேனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும்" என்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், ரஷியாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய அமெரிக்காவும், இதர ஜி-7 நாடுகளும் தடை விதிக்க உள்ளதாக கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது.

எரிசக்திக்கு அடுத்தபடியாக ரஷியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் பொருள் தங்கம் ஆகும். எனவே, அதற்கு தடை விதித்தால், ரஷியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.மேலும், ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


Next Story