கூடுதல் மனிதாபிமான உதவிகள் வேண்டும்; பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் கடிதம்


கூடுதல் மனிதாபிமான உதவிகள் வேண்டும்; பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் கடிதம்
x
தினத்தந்தி 12 April 2023 9:23 AM IST (Updated: 13 April 2023 6:50 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் கடிதம் எழுதி உள்ளார். கூடுதலான மனித நேய உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 2-வது ஆண்டாக நீடிக்கிறது. போரை கைவிட்டு விட்டு பிரச்சினைகளை பேசித்தீர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.இந்த நிலையில் உக்ரைன் துணை வெளியுறவு மந்திரி எமின் தபரோவா இந்தியாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் அவர், மத்திய வெளியுறவு மற்றும் கலாசாரத்துறை ராஜாங்க மந்திரி மீனாட்சி லேகியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, அவர் பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார். இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.அந்த அறிக்கையில கூறி உள்ள பிற முக்கிய அம்சங்கள்:-

* இந்தியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே வெளியுறவு அமைச்சக ரீதியிலான அடுத்த சுற்றுப்பேச்சு உக்ரைன் தலைநகர் கீவில் இரு தரப்புக்கும் வசதியான ஒரு நாளில் நடைபெறும்.

* இந்தியா மருந்துகள், மருத்துவ சாதனங்கள் வழங்குதல் உள்ளிட்ட கூடுதலான மனித நேய உதவிகளை செய்ய வேண்டும் என்று உக்ரைன் கேட்டுக்கொண்டுள்ளது.

* வெளியுறவுத்துறை செயலாளர் (மேற்கு) சஞ்சய் வர்மாவை உக்ரைன் துணை வெளியுறவு மந்திரி எமின் தபரோவா சந்தித்துப்பேசியபோது, உக்ரைனில் உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் உருவாக்குவது இந்திய நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், இருதரப்பு பேச்சில், பொருளாதாரம், பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள உலகளாவிய பிரச்சினைகள் போன்ற துறைகள் இடம் பெற்றிருந்தன.

* உக்ரைன் நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்தும் உக்ரைன் துணை வெளியுறவு மந்திரி எமின் தபரோவா விளக்கினார்.

* இந்தியாவுடன் வலுவான, நெருக்கமான உறவை கட்டியெழுப்புவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்துள்ளது.

* உக்ரைன் துணை வெளியுறவு மந்திரி எமின் தபரோவாவின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story