ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை : உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை விதிக்கும் மசோதா உக்ரைன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கீவ்,
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு குறைந்த விலையில் ஆயுதம் சப்ளை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஈரான் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை உக்ரைன் விதித்துள்ளது.
இந்தநிலையில் ஈரானுக்கு எதிராக உக்ரைன் நாடாளுமன்றத்தில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி புதிய மசோதாவை தாக்கல் செய்து பேசினார். அப்போது இந்த மசோதா அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஈரான் மீது விரிவான துறைசார் பொருளாதார தடைகளை விதிக்க வழிவகை செய்கிறது என அவர் கூறினார். மேலும் உக்ரைன் வழியாக அதன் வளங்களை கடத்துதல், தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மாற்றுவதற்கு தடை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் ரஷியா மற்றும் ஈரானில் உள்ள 141 சட்ட நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உக்ரைன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.